நான் - Tamil Poem By Charan
என் அகம். புறம்.
அது. அவள். அவன்.
அது விசை. பொரி.
ஊக்கி. எந்திரம்.
நான் அதுகைப் பாவை.
அதன் பிட்டத்து மலம்.
துரும்பு. மக்காக்குப்பை.
மக்குப்பிண்டம்.
நான் செயல். அது செயலர்.
அது புலன். நான் கருவி.
உன்னை சந்திக்கையில்
உனக்கும் எனக்கும்
நடுவில் அது.
அதன் கையில்
உன்னை வைக்கும் தராசு.
உன்னுடைய அதன் கையில்
என்னை வைக்கும் தராசு.
உன்னையும் என்னையும்
பரஸ்பரஸ்பரம்
தரசுத்தட்டில் வைத்தபின்
உன்னுடைய அதும்
என்னுடைய அதும்
உரையாடல் நிகழ்த்தும்.
சிலசமயம் வார்தைகளால்.
நீயும் நானும்
தரசுத்தட்டில்
ஊஞ்சலாடுவோம்.
உன் அதை ஏமாற்ற நினைத்தால்
பிச்சைக்காரனுக்கு என்னை பிச்சை இட வைக்கும்.
இல்லையென்றால்
அவனை அடித்து விரட்ட வைக்கும்.
‘இவங்கள என்கரேஜ் பண்ண கூடாதுங்க’
என்னை சொல்ல வைக்கும்.
பணிவானவன். மிருகமானவன்.
பந்தவானவன். இரக்கமற்றவன்.
இறைசிந்தயுள்ளவன். பாவமானவன். என
பல முகமூடிகள் அதன் மற்ற கைகளில்.
மாற்றி மாற்றி நமக்கு அணிவிக்கும்.
அழகுபார்க்கும்.
மற்ற அதுக்கள் எந்த முகமூடி
அணிந்துள்ளன என்று காண துடிக்கும்.
அதன் பிடியில் இருந்து கிழித்து வெளியேறிய
எனது நிர்வாணம் பார்த்த உன்னது உனக்கு சொல்லும்.
உன் காதுக்கு மட்டும்.
‘எவ்வளவு ஈகோ பாரேன்!’
-சரண் (Feb - 2025)